என்ன ஆச்சு..? ஏன் இந்த கவலை..? இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவ் பதிவு
ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியபோதே, அவர் ரோகித் சர்மாவின் இடத்தை பிடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், நேற்று அறிவிப்பு வெளியானது. இதனால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இணையதளங்களில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ், இன்று தனது சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 'உடைந்த இதயம்' எமோஜியை அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், சூர்யகுமார் யாதவுக்கு என்ன ஆச்சு? ஏன் இந்த கவலை? என பதிவிட்டனர். ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
"மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமே தயாராக இருங்கள்.. உங்கள் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது" என தீவிர ரசிகை ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.