வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2-0 என கைப்பற்றினாலும் இந்தியாவின் நம்பர் 1 டெஸ்ட் இடத்திற்கு ஆபத்து..!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2023-07-16 11:03 GMT

image courtesi;twitter/@BCCI

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின்  3வது நாளில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்தார்.  இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 20 ஆம் தேதி  தொடங்குகிறது.

இந்நிலையில்  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான  தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றாலும் இந்தியாவின் நம்பர் 1 டெஸ்ட் இடத்திற்கு ஆபத்து என தகவல்கள் வெளிவந்து உள்ளன.

 ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க முடியும்.

அது எவ்வாறெனில்,இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும். தற்போது ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஒருவேளை,இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால், ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெல்ல வேண்டும்.

அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால், ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தைப் பெற இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்து தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றினால் முதலிடத்திற்கு முன்னேற முடியும்.

இரண்டாவது வாய்ப்பு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என வென்றால் நம்பர் 1 இடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்து விடும்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்