விராட் கோலி அபார சதம்... வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Update: 2023-10-19 16:01 GMT

புனே,

உலகக் கிரிக்கெட்டில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டான்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர்.

டான்சித் ஹசன் 51 ரன்களும், லிட்டன் தாஸ் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹசன் சாண்டோ 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மெஹதி ஹசன் 3 ரன்னிலும், தவுஹித் ஹரிதாய் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் முஷ்பிகுர் ரஹிம் (38) மற்றும் மகமதுல்லா (36) ஆகியோரின் பங்களிப்புடன் வங்காள அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிராஜ், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார். ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் கோலி சதம் அடிப்பதற்காக பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். ஒரு கட்டத்தில், சதம் அடிப்பதற்காக ஒரு ரன்களை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும், அதனை தவிர்த்தார்.

கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார். முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். வங்காளதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் வருகிற ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளது. 

 

 

Tags:    

மேலும் செய்திகள்