சிறந்த பீல்டருக்கான தங்கப்பதக்கம் வென்ற விராட் கோலி...!!
உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரருக்கு இந்திய அணி சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
சென்னை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டின. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அற்புதமாக விளையாடிய விராட் கோலி 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் பேட்டிங் மட்டும் இன்றி பீல்டிங்கிலும் கலக்கினார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ், பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது ஓவரின் 2-வது பந்தை மார்ஷ் அடித்தபோது, பந்து ஸ்லிப் திசையில் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலி டைவ் அடித்து பிடித்தார். இந்த ஆட்டத்தில் மேலும் ஒரு கேட்ச் பிடித்தார்.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பீல்டிங் அபாரமாக இருந்தது. உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரருக்கு இந்திய அணி சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலிப் தங்கப்பதக்கம் வழங்கினார்.