சர்வதேச கிரிக்கெட்டில் 15-வது ஆண்டை நிறைவு செய்த விராட் கோலி - ரன்னுக்காக 510 கி.மீ. தூரம் ஓடியுள்ளார்
ஒரு நாள் போட்டியில் 13 முறை இரட்டை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லி,
2008-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி நேற்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 15-வது ஆண்டை நிறைவு செய்தார். அவருக்கு கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
34 வயதான கோலி இதுவரை 111 டெஸ்டில் விளையாடி 29 சதம் உள்பட 8,676 ரன், 275 ஒரு நாள் போட்டிகளில் 46 சதத்துடன் 12,898 ரன், 115 இருபது ஓவர் போட்டிகளில் ஒரு சதம், 37 அரைசதத்துடன் 4,008 ரன் என்று ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 25,582 ரன்கள் குவித்துள்ளார்.
கோலியின் 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் சுவாரஸ்மான அம்சங்களை கிரிக்கெட் இணையதளம் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு:-
* கிரிக்கெட் களத்தில் இரு முனை ஸ்டம்புக்கு இடைப்பட்ட தூரம் 20.12 மீட்டர். இவற்றில் கோலி சர்வதேச போட்டியில் ஒன்று, இரண்டு, மூன்று வீதம் ரன்னுக்காக (பவுண்டரி ஷாட் கிடையாது) ஓடிய தூரம் 277 கிலோமீட்டர். இதே போல் தனது பார்ட்னரின் ரன்னுக்காக ஓடிய தூரம் 233 கிலோமீட்டர். மொத்தத்தில் அவர் 510 கிலோமீட்டர் தூரம் ஓட்டம் பிடித்திருப்பது புள்ளி விவரங்களின் வாயிலாக அறிய முடிகிறது. கோலியின் ஓட்டத்தை கணக்கிட்டால் அவர் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கோவை வரை சென்றிருக்க முடியும்.
* கோலி இதுவரை 83 மைதானங்களில் விளையாடி இருக்கிறார். அவற்றில் 46 மைதானங்கள் (மொத்தம் 76 சர்வதேச சதம்) சதத்தை கண்டுள்ளன. இதில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் தனித்துவமானது. இங்கு அதிகபட்சமாக 5 சதங்கள் எடுத்துள்ளார். சச்சின் தெண்டுல்கருக்கு (53 இடத்தில் 100 சதம்) அடுத்தபடியாக அதிக மைதானங்களில் ஹெல்மெட்டை கழற்றி உயர்த்தி பிடித்தது கோலி தான்.
* 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது அறிமுக ஆட்டத்திலேயே (2011-ம் ஆண்டு வங்காளதேசத்தக்கு எதிராக) சதம் அடித்த கோலி 2012-ம் 20 ஓவர் உலகக் கோப்பையின் தனது முதல் ஆட்டத்தில் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) அரைசதம் அடித்திருந்தார். இரு உலகக் கோப்பையில் அறிமுக ஆட்டங்களில் சதம், அரைசதம் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
* ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 9 நாடுகளிலும் சதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள 8 நாடுகளில் 7-ல் அவரது பேட் சதத்தை ருசித்துள்ளது. வங்காளதேச மண்ணில் மட்டும் இன்னும் 100-ஐ தொடவில்லை.
* 2013-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சேசிங்கின் போது 27-வது ஓவரில் களம் இறங்கிய கோலி 52 பந்துகளில் சதத்தை எட்டி வியப்பூட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியரின் மின்னல்வேக சதம் இதுவாகும். அதே தொடரில் நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் 30-வது ஓவரில் களம் புகுந்து 61 பந்துகளில் மூன்று இலக்கத்தை தொட்டார். ஒரு நாள் போட்டியில் இலக்கை விரட்டும் போது (சேசிங்) 25-வது ஓவருக்கு பிறகு களம் கண்டு ஒன்றுக்கு மேல் சதம் அடித்த ஒரே வீரர் நம்ம கோலி தான்.
* விராட் கோலியின் 46 ஒரு நாள் போட்டி சதங்களில் 26 சதம் 2-வது பேட்டிங்கின் போது எடுத்தவை. சேசிங்கில் அதிக சதங்கள் நொறுக்கிய சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து (17 சதம்) பறித்தது குறிப்பிடத்தக்கது.
* ஒரு நாள் போட்டியில் 13 முறை இரட்டை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளார். இதில் ரோகித் சர்மாவுடன் இணைந்து எடுத்த 5 இரட்டை சத பார்ட்னர்ஷிப்பும் அடங்கும்.
* 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கோலி பந்து வீசினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவரது முதல் பந்து வீச்சு இது தான். ஆனால் தனது முதல் பந்தை வைடாக வீச அதில் கெவின் பீட்டர்சன் விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டாார். ஆக, தனது முதலாவது பந்தை வீசும் முன்பே விக்கெட்டை சாய்த்த ஒரே வீரர் கோலி தான்.
* இந்த ஆண்டு தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 390 ரன் திரட்டியது. விராட் கோலி 166 ரன்கள் சேர்த்தார். இலங்கை 22 ஓவர்களில் வெறும் 73 ரன்னில் சுருண்டது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் இமாலய வெற்றியாக அமைந்தது. கோலியின் ஸ்கோர் எதிரணியின் ஒட்டுமொத்த ஸ்கோரை விட 93 ரன் அதிகமாகும். அதாவது ஒரு நாள் போட்டியில் ஒரு வீரரின் ரன்னுக்கும், எதிரணியின் ஒட்டுமொத்த ரன்னுக்கும் இடையிலான 2-வது அதிகபட்ச வித்தியாசமாக இது பதிவானது.