டி.என்.பி.எல். கிரிக்கெட்: 79 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.

Update: 2023-06-27 17:09 GMT

Image Courtacy: TNPremierLeagueTwitter

சேலம்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இன்று இரவு 19-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்-அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக சுஜய் , சுரேஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர். அதில் சுரேஷ் குமார் 4 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சாய் சுதர்சன் , சுஜய் ஆகியோர் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த இந்த ஜோடியில் சுஜய் 44 ரன்கள் , சாய் சுதர்சன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய அதீக் உர் ரகுமான் 31 ரன்களும், ராம் அரவிந்த் அரை சதமும் அடித்து அசத்தினர். இறுதியில் கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் சார்பில் சன்னி சந்து 3 விக்கெட்டுட்கள் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணியின் சார்பில் சாத்விக் மற்றும் மோகித் ஹரிஹரன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சாத்விக் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கவுசிக் காந்தி 4 ரன்களும், மொகித் ஹரிஹரன் 7 ரன்களும், பாப்னா 10 ரன்களும், அபிஷேக் 15 ரன்களும், சன்னி சந்து 29 (19) ரன்களும், முகமது கான் 20 ரன்களும், அபிஷேக் தன்வார் 4 ரன்னும், சச்சின் ரதி 1 ரன்னும், ஆகாஷ் சும்ரா 20 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் சேலம் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை அணியின் சார்பில் அதிகபட்சமாக கவுதம் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்