டி.என்.பி.எல்: சேலம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல்
திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
நெல்லை,
டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரவிந்த் மற்றும் கவுசிக் காந்தி முறையே 26 ரன்கள் மற்றும் 7 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய கவின் 25 ரன்கள், மோகித் ஹரிஹரன் 21 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். கிஷோர் ஒரு விக்கெட் எடுத்தார். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விமல் குமார் 42 ரன்களும், சிவம் சிங் 8 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா இந்திரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 50 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்ததுடன், அணியை வெற்றிபெறச்செய்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.