டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றிபெற்றது.
நெல்லை,
6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. நெல்லையில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற, நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஃபர் ஜமல் மற்றும் கோபிநாத் முறையே 11 ரன்கள் மற்றும் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கவின் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற டேரில் பெராரியோ 60 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் சார்பில் சூர்ய பிரகாஷ் மற்றும் பிரதோஷ் பால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் பிரதோஷ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அபராஜித், சூர்ய பிரகாஷுடன் ஜோடி சேர்ந்து ரன்ரேட்டை உயர்த்தினார்.
பின்னர் இந்த ஜோடியில் சூர்ய பிரகாஷ் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அபராஜித்தும் 32 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய சஞ்சய் யாதவ் ரன் ஏதுவும் எடுக்காமலும், அவரைத்தொடர்ந்து பாபா இந்திரஜித் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அஜிதேஷ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். முடிவில் அஜிதேஷ் 25 பந்துகளில் 48 ரன்களும், ஜிதேந்திர குமார் 10 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் நெல்லை அணி 17.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் சார்பில் அதிகபட்சமாக கிஷோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றிபெற்றது.