கோலி பெங்களூருவில் இருந்து வெளியேறி இந்த அணியில் சேர நேரம் வந்துவிட்டது - கெவின் பீட்டர்சன்

விராட் கோலி இந்த அணியில் சேர நேரம் வந்துவிட்டது என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-23 07:49 GMT

 

பெங்களூரு,

நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 70வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் சென்றுவிடலாம் என்ற நிலையில் பெங்களூரு களமிறங்கியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விராட் கோலி 61 பந்துகளில் 101 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய குஜராத் 19.1 ஓவரில் 4 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கான 198 ரன்களை எடுத்தது.

இதன் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. ஐபிஎல் தொடர் 2008- ம் ஆண்டு தொடங்கிய நிலையில் இத்தனை ஆண்டுகள் கடந்தும் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பை வெல்வது கனவாகவே உள்ளது. ஐபிஎல் தொடங்கியது முதல் பெங்களூரு அணியின் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் பெங்களூரு கோப்பையை வெல்லாதது அந்த அணியின் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றை தவறவிட்ட நிலையில், பெங்களூரு அணியில் இருந்து விராட் கோலி வெளியேறி வெறொரு அணிக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மென் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விராட் கோலி பெங்களூரு அணியில் இருந்து வெளியேறி டெல்லி (தலைநகர்) அணியில் சேர நேரம் வந்துவிட்டது' என கூறியுள்ளார். பீட்டர்சன்னின் கருத்துக்கு பெங்களூரு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்