இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி...ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் 'டெலிட்' செய்து விடுவேன் - மொயீன் அலி
ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
லண்டன்,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
நல்லதொரு 'கம்பேக்' தொடராக இது அமைந்தது. மறக்கமுடியாத தொடராகவும் அமைந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன், விக்கெட் வீழ்த்துவேன் என நினைக்கவில்லை.
ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன். ஆனால், இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார். ஆனால், இங்கிலாந்து கேப்டனின் வேண்டுகோளையடுத்து கடந்த ஜூன் மாதம் ஆஷஸ் தொடருக்காக மொயீன் அலி மீண்டும் அணிக்கு திரும்பினார்.
36 வயதான மொயின் அலி, 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 3,094 ரன்கள் குவித்துள்ளார். 204 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மொயின் அலி உதவினார். தற்போது இரண்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.