10 ஆண்டுகளாக தொடரும் இந்திய அணியின் சோகம்...உலகக்கோப்பையிலாவது மாறுமா...?

இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது.

Update: 2023-06-11 13:22 GMT

Image Courtesy: AFP

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது.இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின.

கோலி 49 ரன்களுடனும், ஜடேஜா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷர்துல் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். உமேஷ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய பரத் 23 ரன்னில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது.

இந்த ஆட்டத்தில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் கடந்த 10 ஆண்டுகால சோகம் இன்னும் நீள்கிறது. இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வென்றதில்லை என்ற நீண்ட ஆண்டுகால சோகம் தொடர்கிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறுகிறது. சொந்த மண்ணிலாவது அந்த நீண்ட ஆண்டு கால சோகத்துக்கு இந்திய அணி முடிவு கட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்