ரசிகர்கள் எனக்கும், அணிக்கும் பெரும் அன்பையும், ஆதரவையும் அளித்து வருகிறார்கள்.. டோனி உருக்கம்

‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது கடைசி கட்டமாகும்’ என்று சென்னை அணியின் கேப்டன் டோனி உருக்கமாக தெரிவித்தார்.

Update: 2023-04-22 20:14 GMT

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை தோற்கடித்து 4-வது வெற்றியை தனதாக்கியது.

இதில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் ஆடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. டிவான் கான்வே 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் 41 வயது டோனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், 'என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டம் இதுவாகும். இன்னும் எவ்வளவு காலம் ஆடுகிறேனோ அவ்வளவு காலமும் அனுபவித்து விளையாடுவது முக்கியம். இரண்டு ஆண்டுக்கு பிறகு போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் பெற்று இருக்கிறார்கள். இந்த தருணத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரசிகர்கள் எனக்கும், அணிக்கும் பெரும் அன்பையும், ஆதரவையும் அளித்து வருகிறார்கள். அவர்கள் போட்டி முடிந்த பிறகும் நான் என்ன சொல்கிறேன் என்பதை கேட்க காத்திருக்கிறார்கள். தற்போது எனக்கு பேட்டிங் செய்ய பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைப்பற்றி கூற எதுவுமில்லை. மற்ற வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடுகிறார்கள். எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினார்கள். வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக செயல்பட்டனர். பதிரானா அபாரமாக பந்து வீசினார்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'நான் செய்த ஒரு கேட்ச் (தீக்ஷனா பந்து வீச்சில் மார்க்ரம் அடித்த பந்தை பிடித்தது) சிறப்பானது. கையுறை அணிந்து இருந்தாலும் அதுபோன்று பிடிப்பது என்பது எளிதானது கிடையாது. அனுபவத்தால் தான் இதுபோல் செயல்பட முடியும். எனக்கு வயதாகி விட்டது. அதனை ஒத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை' என்று குறிப்பிட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்