இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 221/5

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

Update: 2023-07-17 12:20 GMT

Image Courtesy: AFP

காலே,

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கத்தில் இலங்கை அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் வெகு நேரத்திற்கு பிறகு தொடங்கியது. 65.4 வது ஓவரில் சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 312 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணி தரப்பில் டி சில்வா 122 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை பாகிஸ்தான் அணி தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் ஷாபிக் 19 ரன், இமாம் உல் ஹக் 1 ரன் , எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து கேப்டன் பாபர் ஆசம், ஷான் மசூத் ஜோடி சேர்ந்தனர். இதில் மசூத் 39 ரன், பாபர் ஆசம் 13 ரன் அடுத்து களம் இறங்கிய சர்ப்ராஸ் அகமது 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 101 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷாத் சகீல், ஆகா சல்மான் இணை அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். ஷகீல் 69 ரன், சல்மான் 61 ரன் எடுத்திருந்த நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி இன்னும் 91 ரன்கள் பின்னிலையில் உள்ளது. 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்