வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20: முக்கியமான கட்டத்தில் சொதப்பிவிட்டேன்- கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்று தொடரையும் பறிகொடுத்த நிலையில் அந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் ெசாதப்பி விட்டதாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒப்புக்கொண்டுள்ளார்.

Update: 2023-08-14 22:07 GMT

கோப்புப்படம் 

லாடெர்ஹில்,

இந்திய அணி தோல்வி

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் லாடெர்ஹில் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 67 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 27 ரன்களும் எடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியா ஷெப்பர்டு 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இடையில் மழையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பிரன்டன் கிங் 85 ரன்களும் (55 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), நிகோலஸ் பூரன் 47 ரன்களும் (35 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-2 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. முன்னதாக முதல் இரு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீசும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வெல்வது 7 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஷெப்பர்டு ஆட்டநாயகன் விருதையும், நிகோலஸ் பூரன் தொடர்நாயகன் விருதையும் (5 ஆட்டத்தில் 176 ரன்) பெற்றனர்.

பாண்ட்யா சொல்வது என்ன?

இந்த ஆட்டத்தில் 14 ரன்னில் (18 பந்து) கேட்ச் ஆன இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தோல்விக்கு பிறகு கூறுகையில், '10 ஓவருக்கு பிறகு ஆட்டத்தில் உத்வேகத்தை இழந்து விட்டோம். குறிப்பாக நான் களம் இறங்கிய போது (10.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 87 ரன்) சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டேன். இத்தனைக்கும் எனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டேன். ஆனால் நினைத்தபடி அதிரடியாக முடிக்க இயலவில்லை. மற்றவர்கள் உண்மையிலேயே நன்றாக ஆடினர். நான் தான் திட்டமிட்டபடி செயல்படாததால் ரன்வேகம் தளர்ந்து போனது.

இந்த தொடரில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ்குமார் மிக நன்றாக விளையாடினர். அணிக்கு வருகை தந்துள்ள ஒவ்வொரு இளம் வீரர்களும் தங்களது திறமையை வெளிக்காட்டினர். பொறுப்பை எடுத்துக் கொண்டு அவர்கள் அர்ப்பணிப்புடன் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. ஒரு அணியாக நாங்கள் சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க விரும்புகிறோம். அணி வீரர்களின் கூட்டத்திலும் அது பற்றி பேசினோம். அதன்மூலமே அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன். அதற்காக வருத்தப்படவில்லை. சில நேரங்களில் தோல்வியும் நல்லது தான். அது உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்' என்றார்.

கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இழந்த முதல் 20 ஓவர் தொடர் இதுவாகும். இதற்கு முன்பு அவரது தலைமையில் இந்திய அணி ஐந்து 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிராவிட் கருத்து

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், 'இந்த தோல்வி இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இல்லை என்பதை காட்டுகிறது. முடிந்த வரை இந்த பிரச்சினையை சரி செய்ய முயற்சிக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணியை பாருங்கள். 11-வது வரிசையில் ஆடும் அல்ஜாரி ஜோசப் கூட பந்தை அடித்து விரட்டுகிறார். அதே போல் இறுதிக்கட்டத்தில் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தும் வீரர்களை அடையாளம் காண வேண்டும். பேட்டிங்கை இன்னும் பலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.' என்றார்.

இந்திய அணி அடுத்து அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காயத்தில் இருந்து தேறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா- அயர்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 18-ந்தேதி டப்ளினில் நடக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்