டி20 உலகக்கோப்பை: குரூப்1-ல் அரைஇறுதி வாய்ப்பு யாருக்கு?

டி20 உலகக்கோப்பையில் குரூப்1-ல் எந்தெந்த அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது என பார்ப்போம்.

Update: 2022-11-02 01:58 GMT

Image Courtesy: AFP 

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. அனைத்து அணிகளும் அரை இறுதிக்கு முன்னேற தீவிரமாக விளையாடி வருகின்றன. குரூப் 1ல் ஆப்கானிஸ்தான் அணியை தவிர்த்து அனைத்து அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

குரூப் 2ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் என தெரிகிறது. பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அந்த இரண்டு ஆட்டங்களில் அந்த அணி ஜெயித்தாலும் மற்ற அணிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், குரூப்1-ல் அரைஇறுதி வாய்ப்பு எந்தெந்த அணிகளுக்கு உள்ளது என பார்ப்போம்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். குரூப்1-ல் அரைஇறுதி வாய்ப்புக்கு 4 அணிகள் இடையே குடுமிப்பிடி நிலவுகிறது.

* நியூசிலாந்தை பொறுத்தவரை 5 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் கடைசி லீக்கில் அயர்லாந்தை சாய்த்தால் போதும். சிக்கலின்றி அரைஇறுதிக்கு வந்து விடும். தோற்றால் மூட்டையை கட்ட வேண்டியது தான்.

* 5 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணி தனது இறுதி லீக்கில் இலங்கையை கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும். ரன்ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால் அதன் மூலம் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கலாம்.

* நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை (5 புள்ளி) எடுத்துக் கொண்டால், தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வெல்ல வேண்டும். அதுவும் அதிக வித்தியாசத்தில் துவம்சம் செய்ய வேண்டும். ஏனெனில் ரன்ரேட்டில் ஆஸ்திரேலியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. இல்லாவிட்டால் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணிகளில் ஒன்று தங்களது கடைசி லீக்கில் தோற்றால் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான நிலைமை உருவாகும்.

* 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை தனது கடைசி லீக்கில் இங்கிலாந்தை வென்றால் மட்டும் போதாது. மற்ற அணிகளின் முடிவையும் சார்ந்து இருக்கிறது. அதாவது நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்று தங்களது கடைசி லீக்கில் தோற்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்