டி20 உலகக்கோப்பை; இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யார்..? - ராகுல் டிராவிட் பதில்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.

Update: 2024-06-04 08:57 GMT

Image Courtesy: AFP

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சஞ்சு சாம்சனை விட சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களம் இறங்குவார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த அயர்லாந்து அணியை குறைத்து மதிப்பிடவில்லை என்றும், தொடக்க ஆட்டக்காரர்களை சூழ்நிலையை பார்த்து விட்டு தேர்வு செய்ய உள்ளதாகவும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி தயாராவோமோ அதே போல இந்த போட்டிக்கும் நாங்கள் தயாராகிறோம். எங்களுடைய பயிற்சிகளில் எந்த குறைவும் கிடையாது. ஏனெனில் சமீபத்தில் பாகிஸ்தான் அணியை அயர்லாந்து வீழ்த்தியதை நாங்கள் அறிவோம். அவர்கள் டி20 கிரிக்கெட்டை அதிகமாக விளையாடுகிறார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்.

பொதுவாக டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எந்த அணியையும் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே நாங்கள் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. 3 வெவ்வேறு அணியை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். எனவே போட்டி நாளன்று எந்த மாதிரியான சூழ்நிலை இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுப்போம்.

அதற்கு தேவையான வீரர்கள் எங்களிடம் இருக்கின்றனர். எனவே எங்களுடைய அணியை இப்போது நாங்கள் வெளியிட விரும்பவில்லை. ஆனால் எங்களிடம் நல்ல தேர்வுகள் இருக்கிறது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக உள்ளனர். விராட் கோலி ஐ.பி.எல் தொடரில் துவக்க வீரராக விளையாடினார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்