தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலான இடம் - இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அணி வெற்றி பெற அவர்களுடைய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதே வீரர்களிடம் எங்களுடைய வலியுறுத்தலாக இருக்கிறது.

Update: 2023-12-07 10:09 GMT

கேப்டவுண்,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட கடைசியாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் 1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலானது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலான இடம் என்று புள்ளி விவரங்கள் சொல்லும். குறிப்பாக இந்த இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் செஞ்சூரியன், ஜோஹன்ஸ்பர்க் மைதானங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். அங்குள்ள மைதானங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட விரும்புவார்கள். அங்கே நீண்ட நேரம் நின்று கடைசி வரை பேட்டிங் செய்யும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும்.

இருப்பினும் அனைவரும் அதே வழியில் விளையாட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தென் ஆப்பிரிக்கா சென்றதும் எங்களுடைய வீரர்கள் பயிற்சிகளை துவங்குவார்கள். இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அணி வெற்றி பெற அவர்களுடைய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதே வீரர்களிடம் எங்களுடைய வலியுறுத்தலாக இருக்கிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்