சர்பராஸ் கான் வாய்ப்புக்காக தேர்வு குழுவின் கதவை தட்டவில்லை...அவற்றை உடைக்கிறார் - அஷ்வின்

சர்பராஸ் கான் வாய்ப்புக்காக தேர்வு குழுவின் கதவை தட்டவில்லை, அவற்றை உடைக்கிறார் என அஷ்வின் கூறினார்.

Update: 2023-01-30 07:34 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டில் பங்கேற்க முடியும் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு கமிட்டியால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சமீபகாலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்ப்ராஸ் கான் இடம் பெறாதது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ப்ராஸ் கானின் சராசரி 107.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம்.

இது தவிர சர்ப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83. இது கிரிக்கெட்டின் ஆகப்பெரும் ஜாம்பவான்களே தொடமுடியாத இடம். ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறாததற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ்க்கு இடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சர்ப்ராஸ் கான் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

இந்த பேட்ஸ்மேனை பற்றி நான் எங்கிருந்து சொல்ல தொடங்குவது என்று தெரியவில்லை. அவர் அணிய்ல் தேர்வு செய்யப்படுவாரா? இல்லையா? என்ற விவாதம் நடந்து வருகிறது. ஆனால் சர்ப்ராஸ் கான் அதை பற்றி கவலைப்படவில்லை.

கடந்த இரு ரஞ்சி சீசன்களில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இரு சீசன்களிலும் 900 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இந்த ரஞ்சி சீசனிலும் கூட 600 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது அபாரமான ஆட்டத்தால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த 3 சீசன்களிலும் அதிக ஸ்டிரைக் ரேட்டிலும், சராசரியாக 100ஐயும் தாண்டியுள்ளார். சர்ப்ராஸ் கான் தேர்வு குழுவின் கதவை தட்டவில்லை. அவர் அந்த கதவை உடைக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்