"நாங்கள் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை' - மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆதங்கம்
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஆமதாபாத்,
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆதங்கத்துடன் கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்னும், டேவிட் மில்லர் 46 ரன்னும், அபினவ் மனோகர் 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 152 ரன்களே எடுத்து 4-வது தோல்வியை சந்தித்தது.
குஜராத் அணி வீரர் அபினவ் மனோகர் (42 ரன்கள், 21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு மும்பை அணி ரன் வித்தியாசத்தில் அடைந்த மோசமான தோல்வி இதுவாகும்.
தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், 'பவுலிங்கின் போது எங்கள் கட்டுப்பாட்டில் தான் ஆட்டம் இருந்தது. ஆனால் கடைசி சில ஓவர்களில் அதிக ரன்களை (கடைசி 4 ஓவர்களில் 70 ரன்கள்) விட்டுக் கொடுத்துவிட்டோம். ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு விதமான பலம் உண்டு. எங்களின் பலம் வலுவான பேட்டிங் வரிசையாகும். அதனை கருத்தில் கொண்டு தான் சேசிங்கை தேர்வு செய்கிறோம். ஆனால் இது எங்களுடைய நாளாக அமையவில்லை.
நாங்கள் பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவு இருந்தது. எங்களில் யாராவது ஒரு பேட்ஸ்மேன் இறுதி வரை நிலைத்து நின்று விளையாடி இருக்க வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 215 ரன்கள் இலக்கை விரட்டுகையில் மிகவும் நெருங்கி வந்து தோற்றோம். ஆனால் இந்த ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் நல்ல தொடக்கம் காணவில்லை (முதல் 8 ஓவர்களில் 45 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது). 200 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டுகையில் இப்படிப்பட்ட தொடக்கத்தை கொடுப்பது சரியானதாக இருக்காது. கடைசி 7 ஓவர்களில் பேட்டிங் செய்வதற்கு எங்களிடம் சிறப்பு பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையே இருந்தது. இந்த தோல்வி ஏமாற்றத்தை அளிக்கிறது' என்றார்.