சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு; தமிழக வீரர் முரளி விஜய் அறிவிப்பு
தமிழக வீரர் முரளி விஜய் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியில் 2008-ம் ஆண்டு அறிமுகமானவர் முரளி விஜய். வலது கை பேட்ஸ்மேனான தமிழக வீரரான முரளி விஜய் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த முறையில் விளையாடி வந்தார்.
இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒரு நாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் முரளி விஜய் விளையாடியுள்ளார். 61 டெஸ்ட் போட்டிகளில் 3,982 ரன்கள் அடித்துள்ளார். அவற்றில் 15 அரை சதங்களும் 12 சதங்களும் அடங்கும்.
17 ஒரு நாள் போட்டிகளில் 339 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதம் அடங்கும். 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முரளி விஜய் 169 ரன்கள் அடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தனது மிக சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய முரளி விஜய் 2014-ம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது வலிமையான பந்து வீச்சுக்கு இடையே 1000 பந்துகளை எதிர்கொண்டார்.
2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியே முரளி விஜய்க்கு கடைசி போட்டியாக அமைந்தது. அதன்பின் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில் அவர் அனைத்து வித போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரிக்கெட் சார்ந்து உள்ள தொழில்களில் உள்ள வாய்ப்புகளை கண்டறிய போகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் முரளி விஜய், பி.சி.சி.ஐ.-யை நம்பி சோர்ந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் வெளிநாடுகளில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் முரளி விஜய் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.