கெய்க்வாட், ஷிவம் துபே அதிரடி வீண்: 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
ஜெய்ப்பூர்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் பவுண்டரிகள், சிக்சர்களை பறக்கவிட்டு 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுபுறம் ஜாஸ் பட்லரின் (27 ரன்கள்) விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் (17 ரன்கள்) துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் கேட்ச் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டி ராஜஸ்தான் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெய்ஸ்வால் (8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்த நிலையில், துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து சென்னை பவுலர் தீக்சனா வீசிய 17-வது ஓவரில் ஷிம்ரான் ஹெட்மேயர் (8 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து துருவ் ஜுரேல்-தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்து ரன் ரேட்டை உயர்த்தினர். இதில் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை பறக்கவிட்ட துருவ் ஜுரேல் (35 ரன்கள்), கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீக்சனா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்த கெய்க்வாட் 47 (29) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரகானே 15 (13) ரன்களும், அம்பத்தி ராயுடு (0) ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
அடுத்ததாக ஷிவம் துபேவுடன், மொயின் அலி ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்த நிலையில் மொயின் அலி 23 (11) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் வாணவேடிக்கை காட்டிய ஷிவம் துபே 29 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு துல்லியமாக இருந்ததால் சென்னை அணி வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். கடைசி ஒவரில் 37 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கடைசி பந்தில் ஷிவம் துபே 52 (33) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஜடேஜா 23 (15) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.