ரஹீம் அதிரடி சதம்; அயர்லாந்துக்கு 350 ரன் இமாலய இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்...!

வங்கதேச அணி தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகுர் ரஹீம் 60 பந்தில் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.

Update: 2023-03-20 12:05 GMT

Image Courtesy: AFP

சில்கெட்,

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் போட்டிகள் முதலாவதாக நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் 183 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வங்கதேசம் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி சில்கெட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் தமிம் 23 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து லிட்டன் தாஸூடன் ஷாண்டோ ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் லிட்டன் தாஸ் 70 ரன்னிலும், ஷாண்டோ 73 ரன்னிலும், அடுத்து வந்த ஷகிப் 17 ரன்னிலும் வீழ்ந்தனர்.

இதையடுத்து விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் டவ்ஹித் ஹ்ரிடோய் ஜோடி சேர்ந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹீம் அயர்லாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் அடித்து அசத்தினார். மறுமுனையில் டவ்ஹித் ஹ்ரிடோய் 49 ரன்னில் அவுட் ஆனார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகுர் ரஹீம் ஆட்டத்தின் கடைசி பந்தில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 60 பந்தில் 100 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து ஆட உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்