சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் - ரோகித் சர்மா

இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

Update: 2023-06-27 12:36 GMT

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பையில் விளையாட இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 6 சுற்றுக்கு ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் முன்னேறி உள்ளன.

இந்த ஆறு அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும். இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோதுகின்றன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இதையடுத்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும். 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இங்கு கோப்பையை கைப்பற்றி உள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும், ஏனெனில் ஆட்டம் வேகமானது மற்றும் அணிகள் முன்னெப்போதையும் விட நேர்மறையாக விளையாடுகின்றன.

இவை அனைத்தும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அவர்களுக்கு பல பரபரப்பான தருணங்கள் கிடைக்கும் என உறுதி அளிக்கிறது.

இந்த அக்டோபர்-நவம்பரில் நாங்கள் நன்றாகத் தயாராகி, சிறப்பாகச் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்