'ஐ.பி.எல். போட்டியின் போது வீரர்கள் பணிச்சுமையை கவனமாக கையாள வேண்டும்' - கேப்டன் ரோகித் சர்மா

ஐ.பி.எல். போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தங்களது பணிச்சுமையை கவனமாக கையாள வேண்டும் என ரோகித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2023-03-23 23:42 GMT

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் பகல்-இரவு மோதலாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 270 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 248 ரன்னில் அடங்கி ஏமாற்றம் அளித்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இருந்தன. 2019-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழப்பது இதுவே முதல்முறையாகும்.

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"இது ஒன்றும் (269 ரன்கள்) சேசிங் செய்ய முடியாத அளவுக்கு பெரிய ஸ்கோர் கிடையாது. 2-வது பாதியில் ஆடுகளம் கொஞ்சம் சவாலாக இருந்தது. ஆனால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டிய தருணங்களில் விக்கெட்டுகளை இழந்தோம்.

இந்த தொடரில் சூர்யகுமார்(3 ஆட்டங்களில் முதல் பந்தில் அவுட்) மொத்தம் 3 பந்துகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். அவர் மோசமான பார்மில் இருந்து விரைவில் விடுபடுவார். 20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடும் அவர் குறைவான ஒருநாள் போட்டிகளில் தான் ஆடி இருக்கிறார். எனவே இதனை பெரிதாக பார்க்கக்கூடாது. திறமையான அவருக்கு ஒருநாள் போட்டியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் காயம் அடைவது கவலைக்குரிய விஷயமாகும். வீரர்களின் பணிச்சுமை சிறப்பாக நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. வீரர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்படுகிறது. இருப்பினும் திடீரென ஏற்படும் காயங்களை கட்டுப்படுத்த முடியாது.

ஐ.பி.எல். போட்டிக்கு (வருகிற 31-ந் தேதி முதல் மே 28-ந்தேதி வரை) பிறகு (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஆசிய கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி) முக்கியமான போட்டிகள் வருவதால் ஐ.பி.எல். போட்டியின் போது வீரர்கள் தங்களது பணிச்சுமையை கவனமாக கையாள வேண்டியது அவசியமானதாகும்.

ஐ.பி.எல். அணியில் ஆடும் இந்திய வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் என்ன மாதிரியான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து ஐ.பி.எல். அணி நிர்வாகத்துக்கு, இந்திய அணி தரப்பில் சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுப்பது ஐ.பி.எல். அணிகளின் கையில் தான் உள்ளது.

வீரர்கள் அனைவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். எனவே அவர்களுக்கு தனது உடலை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். ஒருவேளை ஐ.பி.எல். தொடரின் போது அதிக பணிச்சுமை ஏற்படுவதாக வீரர்கள் உணர்ந்தால் அணி நிர்வாகத்துடன் பேசி விட்டு ஒரு சில போட்டிகளில் இருந்து விலகிக் கொள்ளலாம். ஆனால் இது நடக்குமா என்பது சந்தேகம் தான்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்