நடுவர்களின் சில மோசமான முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது - ஹர்மன்பிரீத் கவுர்

இந்தியா-வங்காளதேச பெண்கள் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ‘டை’யில் முடிந்தது.

Update: 2023-07-23 00:29 GMT

கோப்புப்படம்

மிர்புர்,

இந்தியா-வங்காளதேச பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷமிமா சுல்தானா, பர்கானா ஹோக் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டு அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் எடுத்த முயற்சிக்கு நீண்ட நேரம் பலன் கிடைக்கவில்லை. ஸ்கோர் 93 ரன்னாக (26.2 ஓவர்) உயர்ந்த போது ஷமிமா சுல்தானா 52 ரன்னில் சினே ராணா சுழற்பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் நிகார் சுல்தானா (24 ரன்), ரிது மோனி (2 ரன்) ஆகியோர் நிலைக்கவில்லை. மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பர்கானா ஹோக் 156 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அபாரமாக ஆடிய பர்கானா ஹோக் (107 ரன்கள், 160 பந்து, 7 பவுண்டரி) கடைசி பந்தில் தீப்தி ஷர்மாவால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

50 ஓவர்களில் வங்காளதேச அணி 4 விக்கெட்டுக்கு 225 ரன்கள் சேர்த்தது. ஒருநாள் போட்டியில் அந்த அணி எடுத்த 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 234 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்சமாகும். சோபனா மோஸ்டாரி 23 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சினே ராணா 2 விக்கெட்டும், தேவிகா வைத்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 4 ரன்னிலும், அடுத்து வந்த யாஸ்திகா பாட்டியா 5 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஹர்லீன் தியோல், தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவுடன் இணைந்தார். இருவரும் அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் திரட்டிய நிலையில் மந்தனா 59 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்னில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

இதைத்தொடர்ந்து களம் கண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலைத்து நின்று கடைசி வரை போராடினார். சிறப்பாக ஆடிய ஹர்லீன் தியோல் 77 ரன்னில் ரன்-அவுட் ஆனார். இதையடுத்து வந்த தீப்தி ஷர்மா (1 ரன்), அமன்ஜோத் கவுர் (10 ரன்), சினே ராணா (0) ஆகியோர் வந்த வேகத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் நெருக்கடி ஏற்பட்டது.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன் தேவையாக இருந்தது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சு வீராங்கனை மருபா அக்தர் வீசினார். முதல் 2 பந்துகளில் 2 ரன் வந்தது. 3-வது பந்தில் மேக்னா சிங் (6 ரன்) விக்கெட் கீப்பர் நிகார் சுல்தானாவிடம் கேட்ச் ஆனார். இதனால் இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. எனவே பரபரப்பான இந்த ஆட்டம் 'டை' யில் முடிந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். வங்காளதேசம் தரப்பில் நஹிடா அக்தர் 3 விக்கெட்டும், மருபா அக்தர் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் ஆட்டநாயகி விருதையும், சதம் அடித்து சாதனை படைத்த வங்காளதேச அணியின் வீராங்கனை பர்கானா ஹோக் தொடர்நாயகி விருதையும் கைப்பற்றினர்.

வழக்கமாக ஆட்டம் டையில் (சமனில்) முடிந்தால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும். ஆனால் போட்டிக்குரிய நேரம் முடிந்து விட்டதாக கூறி சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆட்டம் டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன. முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. முன்னதாக நடந்த 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'நாங்கள் இந்த ஆட்டத்தில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். இந்த போட்டியில் நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது. அடுத்த முறை நாங்கள் வங்காளதேசத்துக்கு வரும் போது, இதுபோன்ற நடுவர்களின் முடிவையும் சமாளிக்கும் வகையில் தயாராகுவோம். சூழ்நிலைக்கு தகுந்தபடி வங்காளதேச அணியினர் நன்றாக பேட்டிங் செய்தனர். நடுவில் நாங்கள் சற்று ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்கையில் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தோம். நடுவர்களின் சில மோசமான முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது' என்றார்.

வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா கருத்து தெரிவிக்கையில், 'இது ஒரு சிறப்பான போட்டியாகும். இதன் மூலம் நல்ல அனுபவம் கிடைத்தது. இது எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்கையில் நாங்கள் 230 ரன்கள் எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். பர்கானா சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 5-10 ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைக்கிறேன். இருப்பினும் எங்கள் வீராங்கனைகள் கடைசி வரை போராடிய விதம் நம்பமுடியாத வகையில் இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். இந்த போட்டி தொடர் முழுவதும் எங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது. இந்த நிலையை தொடர முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்