பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சே உலகில் சிறந்தது- அப்துல்லா ஷபீக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சே உலகில் சிறந்தது என்று அந்த அணியின் பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபீக் கூறியுள்ளார்.
லாகூர்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது. 6 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி நடக்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருகிற 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபீக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்களது பந்து வீச்சு மிகவும் நன்றாக உள்ளது. உண்மையில் உலகின் சிறந்த பந்து வீச்சாக உள்ளது. வலைப்பயிற்சியில் நாங்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராப், நசீம் ஷா ஆகியோரை எதிர்கொள்கிறோம். அவர்கள் அளிக்கும் சவால்களை பார்த்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. நாங்கள் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு இது உதவுகிறது. பயிற்சியில் இந்த 3 பேருக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் அதிக நம்பிக்கையுடன் விளையாட முடியும். இந்தியா உள்பட எந்த அணி பந்துவீச்சாளர்களையும் சந்திக்க பயமில்லை என்றார்.