இது தான் டெஸ்ட் கிரிக்கெட்: வெறும் 1 ரன்னில் வெற்றியை பறிகொடுத்த இங்கிலாந்து

1 ரன்னில் திரில் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு நியூசிலாந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

Update: 2023-02-28 08:16 GMT

வெல்லிங்டன்,

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 209 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது.

பாலோ ஆனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து 483 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

ஆனால், இங்கிலாந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறியது. 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தடுமாறிய இங்கிலாந்தை பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மீட்டனர்.

ஆனால், இங்கிலாந்து 201 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆனார். அணி 202 ரன் எடுத்த நிலையில் ரூட் அவுட் ஆனார். ஆனால், இறுதியில் போக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றிக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. கடைசி விக்கெட்டிற்கு ஆண்டர்சன், ஜாக் லீச் களத்தில் இருந்தனர். மெல்ல மெல்ல அவர்கள் 5 ரன்களை எடுத்தனர்.

அணியின் ஸ்கோர் 256 ரன்களாக இருந்த நிலையில் வெற்றிபெற 2 ரன்களும் டிரா ஆக 1 ரன்னும் தேவைப்பட்டது.

இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுவிடும் என அனைவரும் கருதினர். அப்போது, வக்னர் வீசிய பந்தில் ஆண்டர்சன் கீப்பரிடம் கேட் மூலம் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

இங்கிலாந்து 256 ரன்களில் ஆல் அவுட் ஆனதால் நியூசிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கொண்டாடினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

கடைசி விக்கெட் ஜோடியான ஆண்டர்சன் 6 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் ஜாக் லீச் 31 பந்துகளை சந்தித்து வெறும் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். 31 பந்துகளை சந்தித்த லீச் கூடுதலாக ஒரு ரன் எடுத்திருந்தால் இங்கிலாந்து வெற்றிக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால், நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சி இங்கிலாந்திடமிருந்து வெற்றியை பறித்துக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.



Tags:    

மேலும் செய்திகள்