ஐதராபாத் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது மும்பை..!

இன்று நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை, ஐதராபாத் அணியும் மோதின

Update: 2023-04-18 17:53 GMT

ஐதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடி 41 ரன் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து கேமரூன் கிரீன் களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடியில் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் 38 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் வெளியேறினர்.

இதையடுத்து திலக் வர்மா கேமரூன் கிரீனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 17 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். இதையடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிரீன் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் கேமரூன் கிரீன் 64 (40) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத அணியின் சார்பில் ஹேரி புருக் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹேரி புரூக் 9 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 7 ரன்னும், கேப்டன் மார்க்ரம் 22 ரன்களும், அபிஷேக் சர்மா 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக மயங்க் அகர்வாலுடன், கிளாசன் ஜோடி சேர்ந்தார். அதில் அதிரடியில் மிரட்டிய கிளாசன் 36 (16) ரன்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து மறுமுனையில் சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 48 ரன்களில் வெளியேறினார். பின்னர் மார்கோ ஜான்சென் 6 பந்துகளில் 13 ரன்களும் , வாஷிங்க்டன் சுந்தர் (ரன் அவுட் ) 6 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. மும்பை அணியின் ஓவரை அர்ஜுன் தெண்டுல்கர் வீசினார். ஐதராபாத் அணி 5 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 19.5 ஓவர்கள் விக்கெட் 10 இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

இதனால் மும்பை அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்