எம்.எஸ். தோனி கூறிய அட்வைஸ்தான் சிறப்பாக செயல்பட உதவியது - பதிரனா

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் பதிரனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Update: 2024-04-15 03:14 GMT

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்.எஸ். தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

சென்னை அணியின் இந்த வெற்றிக்கு மும்பை அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பதிரனா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் பவர்பிளே ஓவரில் பதற்றமாக இருந்தபோது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்தை வீசுமாறு தோனி சொன்னது தமக்கு உதவியதாக பதிரனா கூறியுள்ளார். அதைப் பயன்படுத்தி வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் திட்டத்தை சரியாக செயல்படுத்தியதாக கூறும் அவர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு:-

"நாங்கள் பவர் பிளேவில் பந்து வீசும்போது நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். ஆனால் அப்போது என்னிடம் வந்த தோனி பாய் அமைதியாக விளையாடுமாறு சொன்னார். அது எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்தது. அதனால் நான் முடிவைப் பற்றி கவலைப்படாமல் என்னுடைய திட்டத்தில் கவனம் செலுத்தினேன். அதை சரியாக செய்ததால் எனக்கு பரிசு கிடைத்தது. சில நேரங்களில் எதிரணியில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தாற்போல் என்னுடைய திட்டத்தை மாற்ற வேண்டும். கடந்த சில வாரங்களாக லேசான காயத்தால் நான் அவதிப்பட்டு வந்தேன். ஆனால் பயிற்சியாளர் குழுவினர் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள்தான் மீண்டும் நான் பார்முக்கு திரும்புவதற்கு முக்கிய காரணம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்