இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்; மேக்ஸ்வெல் புதிய சாதனை..!!

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

Update: 2023-10-17 05:15 GMT

image courtesy; AFP

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் லக்னோவில் நேற்று அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. இலங்கை அணியில் காயத்தால் விலகிய கேப்டன் ஷனகா, பதிரானா ஆகியோருக்கு பதிலாக சமிகா கருணாரத்னே, லாஹிரு குமாரா சேர்க்கப்பட்டனர்.

இந்த ஆட்டத்தில்'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா 61, குஷால் பெரேரா 78 ரன்கள் எடுத்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அவர்களைத் தவிர்த்து குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதை தொடர்ந்து 210 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 11 ரன்கள் மற்றும் சுமித் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மிட்சேல் மார்ஷ் 52 ரன்கள், மார்னஸ் லபுசாக்னே 40 ரன்கள், ஜோஸ் இங்லிஷ் 58 ரன்கள், மேக்ஸ்வெல் 31 ரன்கள், ஸ்டோனிஸ் 20 ரன்கள் எடுத்து 35.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் அடுத்தடுத்த 2 தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த ஆட்டத்தில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற உதவினார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த 2 சிக்ஸர்களுடன் இந்திய மண்ணில் களமிறங்கிய டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இதுவரை 33 இன்னிங்ஸ்களில் 51 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இதன் மூலம் இந்திய மண்ணில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் பொல்லார்ட் சாதனையை தகர்த்து மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2011 – 2022 வரையிலான காலகட்டங்களில் இந்திய மண்ணில் களமிறங்கிய 28 இன்னிங்ஸ்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பொல்லார்ட் 49 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அதனை தகர்த்து மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்