ஆட்டத்தின்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் - முகமது ரிஸ்வான்
நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது முகமது ரிஸ்வானுக்கு தசைபிடிப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணி நிர்ணயித்த 345 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 345 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அப்துல்லா ஷாபீக், முகமது ரிஸ்வான் சதம் அடித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின்போது முகமது ரிஸ்வானுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ரிஸ்வான் தொடர்ந்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் ஆட்டத்தின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் என ரிஸ்வான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எப்பொழுதுமே நமது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது நாம் பெருமை கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த ஆட்டத்தில் நான் எனது அணியின் வெற்றிக்கு பங்காற்றியதை நினைத்து பெருமை கொள்கிறேன். இப்போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தை இல்லை அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் சற்று வித்தியாசமாகவே இருந்தது. இருந்தாலும் நாங்கள் பந்து வீசி முடித்த பின்னர் சேசிங்கிற்கு முன்பாக எங்களால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்திருந்தோம். ஆனால் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட் இழந்ததும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்ததால் அப்துல்லாவிடம் நாம் ஒவ்வொரு படியாக சேசிங்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறி அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தேன். ஆட்டத்தின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.