ஐ.பி.எல். கிரிக்கெட் : குஜராத்-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
ஆமதாபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. முதலாவது ஆட்டத்தில் சுப்மன் கில்லும், அடுத்த ஆட்டத்தில் சாய் சுதர்சனும் அரைசதத்தை தாண்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
மேலும் பேட்டிங்கில் விருத்திமான் சஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா என்று பெரிய பட்டாளமே உள்ளது. பந்து வீச்சில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். சொந்த மண்ணில் மீண்டும் விளையாடும் குஜராத் அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் அதிரடியாக செயல்பட்டு 81 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் ரமனுல்லா குர்பாஸ் (57 ரன்கள்), ரிங்கு சிங் (46 ரன்கள்), ஷர்துல் தாக்குர் (68 ரன்கள்) ஆகியோரின் அசத்தலான பேட்டிங்கால் 204 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி அடுத்து பெங்களூவை 17.4 ஓவர்களில் 123 ரன்னில் சுருட்டியது.
சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி (4 விக்கெட்), சுனில் நரின் (2 ரன்), அறிமுக வீரராக களம் கண்ட 19 வயது சுயாஷ் ஷர்மா (3 விக்கெட்) ஆகியோர் கலக்கினர். வேகப்பந்து வீச்சில் டிம் சவுதி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். முந்தைய வெற்றி உத்வேகத்துடன் கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது. இருப்பினும் வலுவான குஜராத் அணியை அசைப்பது என்பது கொல்கத்தாவுக்கு எளிதான விஷயமாக இருக்காது.