2வது டி20 நடைபெற்ற லக்னோ கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது.

Update: 2023-01-31 09:30 GMT

லக்னோ,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் டி20 போட்டிகள் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதனிடையே, இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 99 ரன்கள் எடுத்தது. பேட்டிங்கின் போது நியூசிலாந்து மிகவும் தடுமாறியது.

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 101 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

100 ரன்கள் என்ற எளிய இலக்காக இருந்தபோதும் இலக்கை அடைய இந்திய அணியும் மிகவும் தடுமாறியது.

இதனிடையே, இரு அணிகளும் ரன் எடுக்க மிகவும் தடுமாறிய நிலையில் ஆடுகளம் சுழற்பந்துக்கு மிகவும் சாதகமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகள் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத அளவுக்கு சுழற்றன. இதனால், மைதானம் விவாதப்பொருளாகியது.

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, உண்மையை கூறவேண்டுமானால் இந்த ஆடுகளம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது' என்று கூறினார்.

இந்நிலையில், லக்னோ மைதானம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் லக்னோ மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய பராமரிப்பாளராக சஞ்சீவ் குமார் அகர்வால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்