தொடரை வெல்லப்போவது யார்? கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை
இந்தியா-இலங்கை அணிகள் கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராஜ்கோட்,
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது அட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது.
புனேயில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் படுமோசமாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் 5 நோ-பால்கள் வீசி அதற்கு பிரீஹிட்டும் வீசியது தான் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' நோ-பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார். அவர் 2 ஓவர்களில் 37 ரன்களை வாரி இறைத்தார்.
இதே போல் உம்ரான் மாலிக், ஷிவம் மாவியும் தலா ஒரு நோ-பால் போட்டனர். இதை எல்லாம் சாதகமாக பயன்படுத்தி இலங்கை 206 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இதை நோக்கி ஆடிய இந்தியா 57 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த நிலையில் அக்ஷர் பட்டேலும், சூர்யகுமார் யாதவும் தடாலடியாக அரைசதம் விளாசியதால் 190 ரன்கள் வரை எடுத்து நெருங்கி வந்து தோற்றது.
இளம் வீரர் சுப்மான் கில் இரு ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. இதே போல் வேகப்பந்து வீச்சும் சீராக இல்லை. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் போது, 'கிரிக்கெட்டில் குறிப்பாக 20 ஓவர் வடிவிலான போட்டியில் எந்த வீரரும் வைடு மற்றும் நோ-பால் வீச விரும்பமாட்டார்கள். இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனுபவமற்றவர்கள். எனவே இது போன்று நடக்கத் தான் செய்யும். அவர்கள் விஷயத்தில் நாம் அவசரப்படாமல் பொறுமை காக்க வேண்டியது அவசியமாகும். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு போக போக தேறி விடுவார்கள்' என்றார்.
'அக்ஷர் பட்டேல் உண்மையிலேயே அருமையாக பேட்டிங் செய்தார். இதே போல் சுழற்பந்து வீச்சுடன் பேட்டிங் செய்யக்கூடிய ஷபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். ரவீந்திர ஜடேஜாவும் விரைவில் திரும்பி விடுவார். அணியில் தற்போது சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்கள் பகுதி வலுவடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றும் டிராவிட் குறிப்பிட்டார்.
இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தவறுகளை திருத்திக் கொண்டு ஒருங்கிணைந்து விளையாடினால் ஆதிக்கம் செலுத்தலாம்.