'இந்தியா சாதிக்க வாய்ப்பு'- சச்சின் தெண்டுல்கர்...!
ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சாதிக்க வாய்ப்பு உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
சென்னை,
ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1988-ம் ஆண்டில் இருந்து இதுவரை 14 முறை நடந்து விட்டது. இதே போல் பெண்களுக்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் நடந்த வேண்டும் என்ற வீராங்கனைகளின் நீண்ட நாள் கனவு ஒரு வழியாக இப்போது நனவாகிறது.
ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், 'முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியின் மூலம் இளம் வீராங்கனைகளுக்கு அனுபவமும், நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். பெண்கள் கிரிக்கெட் உலக அளவில் மேலும் பிரபலமடைய வேண்டும். அடிமட்ட அளவில் இருந்து வளர வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த போட்டி இருக்கும் என்று கருதுகிறேன். இதன் மூலம் உலகின் சிறந்த ஜூனியர் வீராங்கனைகளை அடையாளம் காண்பது மட்டுமின்றி, பல்வேறு நாடுகள் ஜூனியர் கிரிக்கெட்டிலும் அதிக முதலீடு செய்யும் போது, வருங்காலத்தில் ஜூனியர் உலக கோப்பை போட்டி நிலையான வளர்ச்சி பெறும்.' என்றார்.
மேலும் அவர், 'இந்திய அணி சில அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் மற்றும் இளம் திறமையாளர் என்று சரியான கலவையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அமைந்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் சாதிக்கும் திறமையுடைய தனித்துவம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்று சொல்வேன்' என்றும் குறிப்பிட்டார்.