உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்? இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் லீக்கில் இருந்து அரைஇறுதி வரை தொடர்ச்சியாக 10 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது

Update: 2023-11-18 22:37 GMT

ஆமதாபாத்,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்புபடியே இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் லீக்கில் இருந்து அரைஇறுதி வரை தொடர்ச்சியாக 10 ஆட்டங்களிலும் வெற்றிக்கனியை பறித்து கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மாவின் (10 ஆட்டத்தில் 62 பவுண்டரி, 28 சிக்சருடன் 550 ரன்) சரவெடியான தொடக்கமும், விராட் கோலி (3 சதம், 5 அரைசதம் உள்பட 711 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (526 ரன்), லோகேஷ் ராகுல் (386 ரன்), சுப்மன் கில் (350 ரன்) ஆகியோரின் ரன்வேட்டையும் இந்தியாவின் வீறுநடைக்கு அச்சாரமாக அமைந்துள்ளது.

இதே போல் பந்துவீச்சில் முகமது ஷமி (23 விக்கெட்), பும்ரா (18 ), முகமது சிராஜ் (13), ரவீந்திர ஜடேஜா (16) குல்தீப் யாதவ் (15) அமர்க்களப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 7 விக்கெட்டுகளை அள்ளிய முகமது ஷமியின் 'ஸ்விங்' தாக்குதல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர் இடக்கை பேட்ஸ்மேன்களை மட்டும் 8 முறை காலி செய்திருக்கிறார். அதனால் நிச்சயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.

ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்களால் மைதானமே நீலநிறமாக கடல் போல் காட்சியளிக்க போகிறது. அவர்களது ஆர்ப்பரிப்பும், ஆதரவும் இந்திய அணியினருக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். சொந்த மண்ணில் விளையாடுவது இன்னொரு சாதகமான அம்சமாகும். அதே நேரத்தில் நெருக்கடி வளையமும் வீரர்களை சுற்றி வளைத்து நிற்கும். அதை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட்டும், மிட்செல் ஸ்டார்க்கும் துல்லியமான தாக்குதல் தொடுப்பதில் வல்லவர்கள். ஒரு நாள் போட்டியில் ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் மட்டும் கோலி 5 முறை ஆட்டமிழந்திருக்கிறார். இவர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி விட்டால் நமது கை ஓங்கி விடும். ஏற்கனவே லீக்கில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அடக்கியுள்ள இந்திய அணியினர் வலிமையான நம்பிக்கையுடன் விளையாடுவார்கள்.

கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும், 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையிலும் இந்திய அணி இதே ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.

ஒரு நாள் போட்டியில் 50-வது சதம் அடித்து உலக சாதனை படைத்த விராட் கோலி, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியர்கள் சதம் அடித்ததில்லை என்ற குறையை போக்குவாரா? என்ற ஆவலும் போட்டியின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது.

1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அந்த வரிசையில் ரோகித் சர்மாவும் இணைவாரா? என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் இரு லீக்கில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் அடிவாங்கியது. அதன் பிறகு எழுச்சி பெற்ற ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வென்று 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. ஏற்கனவே 5 முறை உலகக் கோப்பையை வென்று இருக்கும் ஆஸ்திரேலியா அந்த எண்ணிக்கையை 6-ஆக உயர்த்த வரிந்துகட்டுகிறது. டிராவிஸ் ஹெட் காயத்தில் இருந்து குணமடைந்து இணைந்த பிறகு ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை வலுவடைந்துள்ளது.

டேவிட் வார்னர் (2 சதத்துடன் 528 ரன்), டிராவிஸ் ஹெட் (5 ஆட்டத்தில் 192 ரன்), மிட்செல் மார்ஷ் (2 சதத்துடன் 426 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். ஸ்டீவன் சுமித், லபுஸ்சேனிடம் இருந்து இன்னும் பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. என்றாலும் அவர்கள் அபாயகரமானவர்களே. ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் நிலைத்து நின்று விட்டால், எதிரணி பந்துவீச்சை பிரித்து மேய்ந்து விடுவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்போடு விளையாடி இரட்டை சதம் விளாசி வரலாறு படைத்ததை மறந்து விட முடியாது. பந்துவீச்சில் ஹேசில்வுட் (14 விக்கெட்), மிட்செல் ஸ்டார்க் (13 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா (22 விக்கெட்) அசத்துகிறார்கள். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அழுத்தமான சூழலை அருமையாக கையாளக்கூடியவர்கள். அது மட்டுமின்றி குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை வைத்து கடைசி பந்துவரை நம்பிக்கை இழக்காமல் போராடுவார்கள். இதுதான் அவர்களின் பலமே.

எனவே இந்தியாவுக்கு எல்லா வகையிலும் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனால் யாருக்கு வெற்றி கிட்டும் என்று ஆரூடம் சொல்வது கடினம். ஆனால் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் முதல் 10 ஓவர்களில் எந்த அணி ஆதிக்கம் செலுத்துகிறதோ அவர்களுக்கே கோப்பையை தூக்கிப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.

வானிலையை பொறுத்தவரை மழை ஆபத்து இல்லை. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம்தான் இறுதிப்போட்டிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 191 ரன்னில் சுருட்டி அதை 30.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இந்திய தரப்பில் ஐந்து பவுலர்கள் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதற்காக இதுவும் குறைந்த ஸ்கோர் ஆட்டமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆடுகளத்தன்மை மெதுவாக இருக்கும் என்பது கேப்டன் ரோகித் சர்மாவின் கணிப்பு.பேட்டிங், சுழல் இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என்று தெரிகிறது. இரவில் பனியின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். அதனால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி 3 இறுதிப்போட்டியிலும், 20 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி 4 இறுதி ஆட்டத்திலும் 2-வது பேட்டிங் செய்த அணிகளே வாகை சூடியது நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்