'நான் சதம் அடித்ததை விட அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி' - பென் ஸ்டோக்ஸ்
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து அசத்தினார்.
புனே,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இதில் நேற்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்துடன் மோதியது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் சதமும், டேவிட் மலான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் அரைசதமும் அடித்தனர்.
பின்னர் 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டுகளும், டேவிட் வில்லே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் 108 ரன்கள் குவித்து அசத்திய இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் போட்டி முடிந்து பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறுகையில்;- ' இந்த ஆட்டத்தில் நான் சதம் அடித்ததை விட எங்களது அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரானது எங்கள் அணிக்கு ஒரு கடினமான தொடராக அமைந்தது. இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய சற்று எளிதாக இருந்தது. குறிப்பாக மைதானத்தில் பவுன்ஸ் இருந்ததால் எங்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது. எனக்கும் வோக்ஸ்க்கும் இடையே சிறப்பான பார்ட்னர்ஷிப் இருந்தது.
நான் எப்போதெல்லாம் இந்த ஆட்டத்தில் அழுத்தமான சூழ்நிலையை சந்தித்தேனோ அப்போதெல்லாம் ஸ்கோர்போர்டை பார்த்து ஓவர்கள் மீதம் இருப்பதை கவனித்தேன். அதன்படியே நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இறுதிவரை விளையாடியதில் மகிழ்ச்சி. வோக்ஸ் ஒரு தரமான ஆல் ரவுண்டர் என்பதை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். இந்த ஆட்டத்திலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்' என கூறியுள்ளார்.