ஸ்டீவன் சுமித்தின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனை - இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோதலில் ஸ்டீவன் சுமித்தின் விக்கெட்டை வீழ்த்தியதே ஆட்டத்தின் போக்கை மாற்றியதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா கூறியுள்ளார்.

Update: 2023-10-09 22:52 GMT

image courtesy: ICC twitter via ANI

சென்னை,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்னில் அடங்கியது. ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் கூட்டாக 6 விக்கெட்டுகளை சாய்த்தனர். அத்துடன் அவர்களது பந்து வீச்சில் 101 பந்துகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்னே எடுக்கவில்லை.

ஆஸ்திரேலியாவை நிலைகுலைச் செய்த இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை சேப்பாக்கத்தில் 10-11 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இதனால் இங்குள்ள ஆடுகளத்தன்மை, சீதோஷ்ண நிலையை நன்கு அறிவேன். 2-3 விக்கெட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக 3 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. சில பந்துகள் பிட்ச் ஆனதும் திரும்பின. சில பந்துகள் அப்படியே நேராக சீறின. இத்தகைய நிலைமையை பேட்ஸ்மேன்கள் கணிப்பது சிரமம்.

ஸ்டீவன் சுமித்தின் (46 ரன்) விக்கெட்டை வீழ்த்தியதே ஆட்டத்தின் திரும்பு முனை. அந்த சமயம் அவர் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்தார். அவரை போன்ற வீரரின் விக்கெட்டை வீழ்த்தும் போது அடுத்து வரும் புதிய வீரரால் உடனே ஒன்று, இரண்டு ரன் வீதம் சீராக எடுப்பது எளிதல்ல. எனவே அவரது விக்கெட்டே ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்று சொல்வேன். 110-3 என்று இருந்த அவர்கள் அதன் பிறகு 199 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகிவிட்டனர். அவருக்கு துல்லியமாக ஸ்டம்பை குறி வைத்து வீச வேண்டும் என்பதே எனது திட்டம். ஆனால் அதிர்ஷ்டம், அந்த பந்து கொஞ்சம் அதிகமாக சுழன்று திரும்பியதால் அவரை ஏமாற்றி ஸ்டம்பை தட்டியது.

முதலிலேயே இது டெஸ்ட் போட்டிக்குரிய ஆடுகளம் என்பதை உணர்ந்து விட்டேன். ஆனால் வெவ்வேறு விதமான முயற்சிகள் எல்லாம் தேவைப்படவில்லை. ஆடுகளம் சுழலுக்கு உதவிகரமாக இருந்ததால், ஸ்டம்பை நோக்கியே பெரும்பாலும் வீசினேன். அதற்கு பலன் கிடைத்தது.

இவ்வாறு ஜடேஜா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்