"நீங்கள் நன்றாக பந்துவீசினால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு"-நெதர்லாந்து உதவி பயிற்சியாளர்
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
புனே,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கும் 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
ஆனால் இந்த உலகக்கோப்பையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே 2025-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே புள்ளி பட்டியலில் ஏற்றம் கண்டு சாம்பியன்ஸ் கோப்பை தகுதி இலக்கை அடைய இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு முன்பாக நெதர்லாந்து அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் வான் நிகெர்க் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, புனே மைதானத்தில் நன்றாக பந்துவீசும் அணியே வெற்றிபெறும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், 'நான் 2 வருடங்கள் புனேவில் இருந்தேன். அந்த சமயத்தில் இந்த மைதானத்தில் சிறிது நேரம் செலவிடுவேன். தற்போது மீண்டும் வந்து மைதானத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. புனேவில் எப்போதும் நல்ல விக்கெட் உள்ளது. இந்த தொடரில் இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 350 ரன்களை எடுத்ததையும் பார்த்தோம், ஆப்கானிஸ்தான் 240 ரன்களை சேசிங் செய்ததையும் நாங்கள் பார்த்தோம். எனவே எல்லை பரிமாணங்கள் எல்லா இடங்களிலும் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வேகமான அவுட்பீல்டு எனவே நன்றாக பந்துவீசும் அணிக்கே இங்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது'என்று கூறியுள்ளார்.