டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: பந்து வீச்சாளர்களில் 'நம்பர் ஒன்' இடத்தில் நீடிக்கும் அஸ்வின்
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.
துபாய்,
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் (903 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிஆட்டத்தில் முறையே 121, 34 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (885 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், இதே டெஸ்டில் 163 ரன் குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (884 புள்ளி) 3 இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதன் மூலம் டாப்-3 இடங்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஒரே அணியை சேர்ந்த வீரர்கள் முதல் 3 இடங்களை பிடிப்பது என்பது அபூர்வமான நிகழ்வாகும். 39 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்த அரிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீஸ் அணியை சேர்ந்த கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்ட், லாரி கோம்ஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வகித்துள்ளனர்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (883 புள்ளி) 2 இடம் சரிந்து 4-வது இடத்தையும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (862 புள்ளி) ஒரு இடம் இறங்கி 5-வது இடத்தையும், இங்கிலாந்தின் ஜோ ரூட் (861 புள்ளி) ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்தையும் பெற்றுள்ளனர். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் (792 புள்ளி) 7-வது இடத்திலும், இலங்கையின் கருணாரத்னே (780 புள்ளி) 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின உஸ்மான் கவாஜா (777 புள்ளி) 9-வது இடத்திலும் இருக்கிறார்கள். இந்திய வீரர் ரிஷப் பண்ட் (758 புள்ளி) 10-வது இடத்தில் தொடருகிறார்.
உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் முறையே 48 மற்றும் 66 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 11 இடங்கள் எகிறி 36-வது இடத்தையும், 89, 46 ரன்கள் வீதம் எடுத்த இந்திய வீரர் ரஹானே 37-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா 12-வது இடத்திலும், விராட் கோலி 13-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (860 புள்ளி) 'நம்பர் ஒன்' இடத்தில் நீடிக்கிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ரபடா (தென் ஆப்பிரிக்கா), ஷகீன் அப்ரிடி (பாகிஸ்தான்) ஆகியோர் முறையே 2 முதல் 5-வது இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர். இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன், ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் ஆகியோர் தலா ஒரு இடம் உயர்ந்து இணைந்து 6-வது இடத்தை பிடித்துள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6-ல் இருந்து 8-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். ரவீந்திர ஜடேஜா 9-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 10-வது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்தவித மாற்றமுமில்லை. ரவீந்திர ஜடேஜா (434 புள்ளி) 'நம்பர் ஒன்' ஆக வலம் வருகிறார்.