மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது... இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி

கங்குலி, மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று அவரை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.

Update: 2023-05-05 11:02 GMT

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியிடன் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில் ஒருசிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கங்குலி கூறுகையில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது. அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நான் செய்தித்தாள்களில் படித்தேன். அது அவர்கள் யுத்தம். அவர்கள் சண்டையிடட்டும்.

தெரியாத ஒன்றை பற்றி பேசக்கூடாது என்பதை இந்த விளையாட்டு உலகில் கற்றுக்கொண்டேன். மல்யுத்த வீரர்கள் ஏராளமான பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கங்குலி, மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று அவரை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்