'2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்': ரோகித் சர்மா
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.
பார்படாஸ்,
இந்தியாவில் இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட உள்ளது. தோனியின் கீழ் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெறாதது குறித்து ரோகித் ஏமாற்றம் அடைந்ததாக அடிக்கடி பேசியுள்ளார். இந்நிலையில் பார்படாஸில் நடந்த உலகக் கோப்பை டிராபி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ரோகித் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் கசப்பான காலகட்டத்திற்கு அவரது நினைவை மீண்டும் கொண்டு சென்றார்.
அவர் கூறுகையில் "2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. வீட்டில் இருந்து பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் அணியில் இடம் பெறாததால் அந்த உலகக் கோப்பை தொடரை பார்க்க போவதில்லை என்று முடிவு செய்தேன். ஆனால் என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியா மிகவும் நன்றாக விளையாடியது.
காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது வீரர்கள் மீது எவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்பதை நான் அறிவேன். அந்த நேரத்தில் ஒவ்வொரு வீரரும் அனுபவித்திருக்க வேண்டிய அழுத்தத்தை என்னால் உணர முடியும். அந்த போட்டியில் யுவராஜ் மற்றும் ரெய்னாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. 2011 ஆம் ஆண்டில், உலகக் கோப்பை பட்டத்தை சொந்த மண்ணில் வென்று சாதித்ததன் மூலம் இந்தியா கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அத்தியாயத்தை பொறித்தது' என்று அவர் கூறினார்.
2015 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் விளையாடினார். மேலும் 2019ஆம் ஆண்டு ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். அந்த உலகக் கோப்பையில் அவர் மொத்தம் 5 சதங்கள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.