டோனிக்கு பிறகு அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் இவர் தான் - முன்னாள் வீரர் கணிப்பு
அடுத்த ஐபிஎல் தொடரில் டோனியிடமிருந்து கேப்டன் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்வார் என்று இந்திய முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
16-வது ஐபிஎல் தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்குவாட் 57 ரன்கள் சேர்ந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், டோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்குவாட் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தீப் தேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 3 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்குவாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியுள்ளார். சென்னை அணியின் தத்துவங்கள் மற்றும் வடிவம், முறை அனைத்தும் ருதுராஜ்க்கு தெரியும்.
அடுத்த கேப்டன் தத்துவ ரீதியில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சென்னை அணி விரும்புகிறதே தவிர வேறு எந்த வழியையும் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை தத்துவ ரீதியில் ருதுராஜ் கெய்குவாட் ஏற்கனவே தகுதியடைந்துவிட்டார்.
அடுத்த ஐபிஎல் தொடரில் டோனியிடமிருந்து கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்குவாட் எடுத்துக்கொள்வார்' என்றார்.