ரசிகர்கள் வெள்ளத்தில் ஐபிஎல் கோப்பையுடன் குஜராத் அணியினர் வெற்றி ஊர்வலம்..!!
அகமதாபாத் வீதிகளில் ஐபிஎல் கோப்பையுடன் குஜராத் அணி வெற்றி ஊர்வலம் சென்றனர்.
அகமதாபாத்,
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடித்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். முதல் அணியாக பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தட்டி சென்றுள்ளது.
இந்த நிலையில் குஜராத் அணியினர் ஐபிஎல் கோப்பையுடன் அகமதாபாத் வீதிகளில் திறந்த பஸ்சில் வெற்றி ஊர்வலம் சென்றனர். அப்போது வழிநெடுகிலும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
குறிப்பாக பலர் "ஹர்திக் , ஹர்திக் " என முழக்கமிட்டனர். அவர்களுடன் பேருந்தில் இருந்தவாரே ஹர்திக் பாண்டியா "செல்பி" எடுத்து கொண்டார். இது குறித்த வீடியோவை பாண்டியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி நேற்று கேப்டன் ஹர்திக்,தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா உட்பட அணியின் மற்ற வீரர்கள் குஜராத் முதல் மந்திரி பூபேந்திரபாய் படேல் சந்தித்தனர். குஜராத் டைட்டன்ஸ் குழுவுக்கு பாராட்டு தெரிவித்த முதல் மந்திரி, கேப்டன் பாண்டியாவுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்,