விஜய் சங்கர், மில்லர் மிரட்டல்: கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றிபெற்றது.

Update: 2023-04-29 14:23 GMT

கொல்கத்தா,

ஐபிஎல் தொடரில் 39வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன், ரஹமதுல்லா குர்பாஸ் களமிறங்கினர். ஜெகதீசன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷர்துல் தாக்கூர் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் 11 ரன்னிலும், கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்த நிலையில் தொடக்க வீரரான குர்பாஸ் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்தை நாளா பக்கமும் சிக்சர்களாக சிதறடித்த குர்பாஸ் அதிரடி ஆட்டத்தை ஆடினார். 39 பந்துகளை சந்தித்த குர்பாஸ் 5 பவுண்டரி, 7 சிக்சர்கள் உள்பட 81 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரசல் 19 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் அந்த அணியின் முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் தொடக்க வீரர்களாக சகா, சுப்மன் கில் களமிறங்கினர். சகா 10 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பாண்டியா 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கொல்கத்தா வீரர்களின் பந்து வீச்சை விஜய் சங்கர், மில்லர் சிக்சர்களாக பறக்க விட்டனர். இறுதியில் குஜராத் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றிபெற்றது.

அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 24 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 51 ரன்களுடனும், டேவிட் மில்லர் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 32 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் குஜராத் வெற்றிக்கு வழிவகுத்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்