பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி, கொலை மிரட்டல்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் ரூ.10 லட்சம் பணமோசடி செய்து, கொலை மிரட்டலும் விடப்பட்டு உள்ளது.

Update: 2023-02-04 06:17 GMT



புதுடெல்லி,


ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருபவர் தீபக் சாஹர். ஐ.பி.எல். போட்களில் சிறப்பாக செயல்பட்ட அவர், பின்னர் இந்திய அணிக்கு தேர்வானார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சி.எஸ்.கே. அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக இவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடவில்லை. இவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை அணியின் ஒரு போட்டியின்போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவிக்க இவர்கள் 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் தீபக், ஜெயா இருவரிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் சொகுசு ஓட்டலில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.

இதுபற்றி சாஹர் தனது சமூக ஊடக பதிவில், உன்னை முதல்முறை சந்தித்தபோதே, எனக்கான ஒருவள் நீ என்றும், உனக்கு சரியானவன் நான் என்றும் உணர்ந்தேன். நாம் இணைந்தே நம் வாழ்வின் ஒவ்வொரு தருண நிகழ்வையும் மகிழ்ச்சியாக பகிர்ந்தோம்.

இதுபோன்று எப்போதும் உன்னை மகிழ்ச்சியாவே வைத்திருப்பேன். ஒவ்வொருவரும் எங்களை ஆசீர்வதியுங்கள் என பதிவிட்டார். தொடர்ந்து இவர்களது திருமண வாழ்க்கை சீராக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் ஐதராபாத் நகரை சேர்ந்த 2 பேர் ஜெயா பரத்வாஜிடம் இருந்து ரூ.10 லட்சம் பணமோசடி செய்து உள்ளனர். இதுபற்றி சஹார் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

தீபக்கின் தந்தை லோகேந்திரா சஹார், ஆக்ரா நகரில் உள்ள ஹரி பர்வதம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வியாபாரம் செய்ய போகிறோம் என கூறி இரண்டு பேரும் ரூ.10 லட்சம் பணம் பெற்று கொண்டு பின்னர் அதனை திருப்பி தராமல் இழுத்தடிக்கின்றனர்.

அதுபற்றி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என தெரிவித்து உள்ளார். அவர்கள் துருவ் பரீக் மற்றும் கம்லேஷ் பரீக் ஆகியோர் ஆவர் என எப்.ஐ.ஆர். பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் ஒருவர் ஐதராபாத் கிரிக்கெட் கூட்டமைப்பில் அதிகாரியாக உள்ளார் என கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஜெயாவிடம் இருந்து அவர்கள் பணம் பெற்று உள்ளனர். ஆனால், இன்னும் அதனை திருப்பி தராமல் உள்ளனர் என புகாராக கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்