நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 325 ரன்னில் 'டிக்ளேர்'
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.
மவுன்ட் மாங்கானு,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது.
'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி (4 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட் அடுத்து வந்த ஆலி போப்புடன் இணைந்து நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தார். துரிதமாக மட்டையை சுழற்றிய பென் டக்கெட் 84 ரன்னிலும் (68 பந்து, 14 பவுண்டரி), ஆலி போப் 42 ரன்னிலும், ஜோ ரூட் 14 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இங்கிலாந்து அணியினர் தொடர்ந்து அடித்து ஆடினர்.
5-வது வீரராக களம் கண்டு அதிரடி காட்டிய ஹாரி புரூக் 89 ரன்னில் (81 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) நீல் வாக்னெர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அவருடன் இணைந்த பென் போக்ஸ் 38 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தேனீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 58.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதிரடியாக 'டிக்ளேர்' செய்தது. ஆலி ராபின்சன் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நீல் வாக்னெர் 4 விக்கெட்டும், டிம் சவுதி, ஸ்காட் குக்கலைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் (1 ரன்) ஆலி ராபின்சன் பந்து வீச்சிலும், அடுத்து வந்த கேன் வில்லியம்சன் (6 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (4 ரன்) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சிலும் விக்கெட்டை இழந்து வந்த வேகத்திலேயே நடையை கட்டினர்.
நேற்றைய ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.