நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 305 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 305 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2023-03-09 21:45 GMT

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷடா பெர்னாண்டோ 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து குசல் மென்டிஸ், கேப்டன் கருணாரத்னேவுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்கோர் 151 ரன்னை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. 40 பந்துகளில் தனது 16-வது அரைசதத்தை நிறைவு செய்த குசல் மென்டிஸ் 87 ரன்னில் (83 பந்து, 16 பவுண்டரி) டிம் சவுதியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். கேப்டன் கருணாரத்னே 50 ரன்னில் வெளியேறினார். இதன் பின்னர் தினேஷ் சன்டிமால் 39 ரன்னிலும், மேத்யூஸ் 47 ரன்னிலும், டிக்வெல்லா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முன்னதாக மேத்யூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது இலங்கை வீரர் என்ற சிறப்பை பெற்றார்.இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் ஒரு மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

நேற்றைய முடிவில் இலங்கை அணி 75 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்துள்ளது. தனஞ்ஜெயா டி சில்வா (39 ரன்), கசுன் ரஜிதா (16 ரன்) களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்