தியோதர் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டலம் 'சாம்பியன்'
இந்த கோப்பையை தெற்கு மண்டலம் வெல்வது இது 9-வது முறையாகும்.
புதுச்சேரி,
தியோதர் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நேற்று புதுச்சேரியில் நடந்த இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம்- கிழக்கு மண்டல அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டல அணி 8 விக்கெட்டுக்கு 328 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோகன் குன்னுமால் 107 ரன்கள் (75 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். கேப்டன் மயங்க் அகர்வால் (63 ரன்), விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (54 ரன்) அரைசதம் அடித்தனர். சாய் சுதர்சன் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து 329 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கிழக்கு மண்டலம் 46.1 ஓவர்களில் 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன்கள் (8 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். இதன் மூலம் தெற்கு மண்டலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தியோதர் கோப்பையை வசப்படுத்தியது.
இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட தெற்கு மண்டலம் லீக் சுற்றில் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பையை தெற்கு மண்டலம் வெல்வது இது 9-வது முறையாகும்.