நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி: பாலோ ஆன் முடிவுக்கு வருத்தமா?: ஸ்டோக்ஸ் விளக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

Update: 2023-02-28 10:03 GMT

வெல்லிங்டன்,

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 209 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது. பாலோ ஆனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து 483 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆனால், இங்கிலாந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறியது. 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தடுமாறிய இங்கிலாந்தை பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மீட்டனர். ஆனால், இங்கிலாந்து 201 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆனார். அணி 202 ரன் எடுத்த நிலையில் ரூட் அவுட் ஆனார். ஆனால், இறுதியில் போக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றிக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. கடைசி விக்கெட்டிற்கு ஆண்டர்சன், ஜாக் லீச் களத்தில் இருந்தனர். மெல்ல மெல்ல அவர்கள் 5 ரன்களை எடுத்தனர். அணியின் ஸ்கோர் 256 ரன்களாக இருந்த நிலையில் வெற்றிபெற 2 ரன்களும் டிரா ஆக 1 ரன்னும் தேவைப்பட்டது. இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுவிடும் என அனைவரும் கருதினர். அப்போது, வக்னர் வீசிய பந்தில் ஆண்டர்சன் கீப்பரிடம் கேட் மூலம் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

இங்கிலாந்து 256 ரன்களில் ஆல் அவுட் ஆனதால் நியூசிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கொண்டாடினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

தோல்வி பற்றி இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

நியூசிலாந்தை மீண்டும் பேட் செய்யும் விதமாக பாலோ ஆனை அமல்படுத்திய பிறகு எங்களுக்கான தோல்வியை நாங்கள் தான் உருவாக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. நியூசிலாந்தின் முன்னணி பேட்டர்களைக் கடந்த மூன்று இன்னிங்ஸிலும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி மிகச்சரியாக விளையாடினால் மட்டுமே எங்களை நெருக்கடிக்கு ஆளாக்க முடியும் என எண்ணினோம்.

கடைசி இன்னிங்ஸில் 250 ரன்களை விரட்ட வேண்டும் என்பதை எண்ணி நாங்கள் அஞ்சியதே இல்லை. நியூசிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்ததுடன் அருமையாகப் பந்துவீசி வெற்றியடைந்துள்ளார்கள். இப்போது என்னுடைய முடிவை எண்ணிப் பார்ப்பேனா என்றால் நிச்சயம் இல்லை. அந்த முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன். நியூசிலாந்து அணி எங்களை விடவும் நன்றாக விளையாடியது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்